எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: மறு கூட்டலில் 498 மதிப்பெண் எடுத்த நாகர்கோவில் மாணவி

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: மறு கூட்டலில் 498 மதிப்பெண் எடுத்த நாகர்கோவில் மாணவி

குமரி மாவட்ட அளவில் முதல் இடமும், மாநில அளவில் இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.

நாகர்கோவிலை அடுத்த ஈத்தாமொழியை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகள் கவுசல்யா.

இவர் நாகர்கோவில் அல்போன்சா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். கடந்த எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் இவருக்கு 491 மதிப்பெண் கிடைத்தது. பாடவாரியாக தமிழ்–98, ஆங்கிலம்–100, கணிதம்–100, அறிவியல்–100, சமூக அறிவியல்–93 மதிப்பெண்கள் எடுத்து இருந்தார்.

மதிப்பெண் பட்டியலை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா, சமூக அறிவியல் பாடத்தில் எனக்கு நிச்சயம் 100 மதிப்பெண் கிடைக்கும் என எதிர்பார்த்தேன், ஆனால் 93 மதிப்பெண்களே கிடைத்துள்ளது. எனவே அந்த பாடத்தின் விடைத்தாளை மறு கூட்டல் செய்ய வேண்டும், அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என பெற்றோரிடம் கூறினார்.

மகளின் நம்பிக்கையை பார்த்து பெற்றோரும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக கவுசல்யாவின் சமூக அறிவியல் பாட விடைத்தாளை மட்டும் மறுகூட்டல் செய்ய விண்ணப்பித்தனர்.

இதற்கான முடிவு இன்றுதான் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் வெளியானது. இதில் கவுசல்யாவின் நம்பிக்கை வீண்போகவில்லை. அவர் கூறியபடியே இந்த பாடத்திலும் அவருக்கு 100 மதிப்பெண் கிடைத்தது.

ஏற்கனவே போடப்பட்ட 93 மதிப்பெண்ணில் இருந்து கூடுதலாக 7 மதிப்பெண் அதிகம் பெற்று அவர் 100 மதிப்பெண் பெற்றார்.

இதன் மூலம் கவுசல்யாவின் மொத்த மதிப்பெண் 491–ல் இருந்து 498 ஆக உயர்ந்தது. இதன் மூலம் கவுசல்யாவுக்கு குமரி மாவட்ட அளவில் முதல் இடமும், மாநில அளவில் இரண்டாம் இடமும் கிடைத்துள்ளது.
Source : maalaimalar (http://www.maalaimalar.com/2014/07/11132559/SSLC-exam-re-correction-498-ma.html)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *