நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் ஓடும் பஸ்சில் இறங்க முயன்றபோது 2 அரசு பஸ்களுக்கு இடையில் சிக்கி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
நாகர்கோவில் மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு காலை, மாலை நேரங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். பஸ்களை நிறுத்தி வைக்க போதிய இடவசதி பஸ் நிலையத்தில் கிடையாது. இதுபோன்ற காரணங்களால் பஸ்கள், பஸ் நிலையத்துக்குள் நுழையவே திக்குமுக்காடி செல்வது வழக்கம். இதுபோக பிரேக் பிடிக்காத அரசு பஸ்களால் அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படும் சம்பவமும் நிகழ்கிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 8.30 மணியளவில் வடசேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் அரசு பஸ் ஒன்று அண்ணா பஸ் நிலையத்துக்குள் வந்தது. அந்த பஸ், பஸ் நிலையத்துக்குள் நுழைந்தபோது ஒரு வாலிபர் பஸ்சில் இருந்து இறங்க முயன்றதாக தெரிகிறது. இதை கவனிக்காத டிரைவர் பஸ்சை திருப்ப முயன்றார்.
பஸ்களின் இடையில் சிக்கி சாவு
அப்போது பஸ் நிலையத்தில் 1-வது நடைமேடை முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பஸ்சுக்கும், கன்னியாகுமரி சென்ற பஸ்சுக்கும் இடையில் வாலிபர் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டார். இதை பார்த்த பஸ்சின் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தி விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். பஸ்களின் இடையில் சிக்கிய வாலிபர், நசுங்கியபடி உயிருக்காக போராடினார்.
அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பயணிகள் அலறினர். என்ன செய்வதென்று தெரியாமல் அங்குமிங்கும் அலைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த நாகர்கோவில் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கு விரைந்து வந்து பஸ்சை இயக்கி அப்புறப்படுத்தினர்.
அதைத்தொடர்ந்து படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த வாலிபரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்து விட்டார்.
மாணவர்
இதுபற்றிய தகவல் அறிந்த போக்குவரத்து ஒழுங்குபிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். இறந்த வாலிபர் யார்? என்பது தெரியாமல் இருந்தது. அதைத்தொடர்ந்து வாலிபர் வைத்திருந்த பர்சை போலீசார் சோதனையிட்டனர்.
அதில் ஒரு வாக்காளர் அட்டை இருந்தது. அதில், தடிக்காரன்கோணம் பால்குளத்தை சேர்ந்த மோகன் மகன் அனில்குமார் (வயது 22) என்பது எழுதப்பட்டிருந்தது. இதனால் பலியானவர் அனில்குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், பலியான அனில்குமார் அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார் என்பதும் தெரியவந்தது. மேலும் அவர் விடுமுறை நாட்களில் வடசேரி பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்தநிலையில் வேலையை முடித்து விட்டு நேற்று ஊருக்கு செல்வதற்காக அண்ணா பஸ்நிலையம் வந்த போது விபத்தில் சிக்கி இறந்துள்ளார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். Nagercoil அண்ணா பஸ்நிலையத்தில் பஸ்களுக்கு இடையில் சிக்கி வாலிபர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
—
Prem Kumar
F5ive Technologies
Ph: 9894785885