மருத்துவ குணம் வாய்ந்த கேரை மீன் சீஸன் குமரியில் தொடக்கம்: Overseas export of 80 tonnes per day

colachal-fish

கன்னியாகுமரி கடல் பகுதியில் மருத்துவ குணம் வாய்ந்த கேரை மீன் சீஸன் தொடங்கியுள்ளது. வெளிநாடுகளுக்கு தினமும் 80 டன்னுக்கு மேல் இவை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இவற்றை கொள்முதல் செய்வதற்காக கேரள மீன் வியாபாரிகள், குமரி மீன்பிடி துறைமுகங்களில் குவிகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சின்னமுட்டம், குளச்சல், தேங்காப்பட்டிணம், முட்டம் ஆகியவற்றை தங்குதளமாக கொண்டு விசைப்படகுகள் மீன்பிடித்து வருகின்றன. ஆழ்கடல் மீன்பிடித்தலில் தனித்திறன் வாய்ந்த மீனவர்கள் குமரியில் அதிகம் உள்ளனர். குறிப்பாக ஆழ்கடலுக்கு சென்று சூறை மீன் பிடிப்பது, குமரி கடல் பகுதிகளில் தற்போதும் அதிகம் நடக்கிறது.

பிற கடலோர பகுதிகளை விட, குமரி கடல் பகுதியில் பிடிபடும் மீன்களுக்கு சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இங்கு பிடிக்கப்படும் மீன்கள் கூடுதல் சுவையுடன் இருப்பதால், இவற்றை வெளிநாட்டினர் விரும்பி வாங்குகின்றனர்.

கேரை மீன் வரத்து அதிகம்

சமீபத்தில் கணவாய், இறால் ஆகிய மீன்கள் குமரியிலிருந்து பெருமளவு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. தற்போது குளச்சல், சின்னமுட்டம், தேங்காப்பட்டிணம் மீன்பிடி துறைமுகங்களில் கேரை மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. ஆழ்கடலுக்கு சென்று விட்டு கரை திரும்பும் விசைப்படகுகள் மூலம் டன் கணக்கில் இம்மீன்கள் கொண்டு வந்து இறக்கப்படுகின்றன. குறிப்பாக குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இந்த மீன்கள் வரத்து அதிகம் உள்ளது.

குமரி மீன்பிடி துறைமுகங்களில் இருந்து கேரை மீன்களை கேரள வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். அங்கு விற்றது போக, எஞ்சிய மீன்களை அரபு நாடுகள் மற்றும் பிற வெளிநாடுகளுக்கு திருவனந்தபுரத்திலிருந்து ஏற்றுமதி செய்கின்றனர்.

மருத்துவ குணம் வாய்ந்தது

இதுகுறித்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த மீனவர் சேவியர் கூறும் போது, ‘‘கேரை மீனை பொறுத்தவரை ஆஸ்துமா, முதுகுவலி, இருதய கோளாறு உள்ளிட்ட நோய்களுக்கு நல்ல நிவாரணமளிக்கும் தன்மை வாய்ந்தது. இறைச்சி போன்ற சுவையும் இதில் நிறைந்துள்ளது.

ஒரு மீன் குறைந்த பட்சம் 25 கிலோ முதல் அதிக பட்சம் 60 கிலோ எடையுடன் உள்ளது. கிலோ ரூ.70-க்கு மேல் விற்பனையாகிறது. சராசரியாக ஒரு கேரை மீன் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் விருந்து உள்ளிட்ட ஆடம்பர நிகழ்ச்சிகளுக்கு முக்கிய உணவாக கேரை மீன்களை பயன்படுத்துகின்றனர். அங்கு இவற்றுக்கு நல்ல மவுசு இருப்பதால், ஏற்றுமதி செய்வதற்காக கேரள வியாபாரிகள் கேரை மீன்களை போட்டிபோட்டு வாங்குகின்றனர். இதனால் இந்த சீஸனில் விசைப்படகு மீனவர்களுக்கு நல்ல வருவாய் கிடைக்கிறது’’ என்றார்.

80 டன் ஏற்றுமதி

மீன்வள அதிகாரிகள் கூறும்போது, ‘‘குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மீன்பிடி துறைமுகங்களிலும் இருந்தும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தினமும் 80 டன் கேரை மீன்கள், கேரள வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படு கிறது’’ என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *