திருவட்டார் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதி 3 பேர் இறந்தனர். தம்பதியினர் ஆஸ்பத்திரிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நடைபெற்றது.
கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ் வகுப்பு முடிந்து மாணவ- மாணவிகளை ஏற்றி வந்து கொண்டிருந்தது. பஸ் திருவட்டார் அரசு பள்ளி அருகே வந்த போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஆரம்பத்தில் ஒரு வேன் மீது லேசாக மோதிய பஸ் பின்னர் ரோட்டோரம் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதனால் பாதசாரிகள் அலறி அடித்து தப்பிக்க ஓடினர். திருவட்டார் பஸ்ஸடாண்ட் அருகே சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த கார் மீது பஸ் மோதியது. மோதிய வேகத்தில் கார் அதற்கு முன்னால் சென்ற மினி டெம்போ மீது மோதியது. பஸ்சுக்கும், மினிடெம்போவுக்கும் இடையில் சிக்கிய கார் அப்பளம் போல் நொறுங்கியது. இதில் காரில் இருந்த மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் துயரம்: அருமநல்லூரை சேர்ந்தவர் கரிமணியாபிள்ளை. இவரது மனைவி நீலம்மாள், 68 உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திருவனந்தபுரத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சைக்காக ஒரு காரில் இருவரும் சென்று கொண்டிருந்தனர். காரை ஜீவா ஓட்டினார். அருமநல்லூரில் இருந்து நாகர்கோவில் வழியாக சென்றால் டிராபிக் அதிகமாக இருக்கும் என்பதால் இவர்கள் தடிக்காரன்கோணம், குலசேகரம் வழியாக வந்த போது இந்த துயர விபத்து நடைபெற்றுள்ளது.
காரில் மோதுவதற்கு முன்பு ரோட்டோரம் நின்று கொண்டிருந்த பைக், வேன் போன்றவற்றில் மோதியதில் பத்து பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். விபத்துக்கு காரணமான பஸ் டிரைவர் போதையில் இருந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.