சர்வதேச அளவில், கொழும்பு துறைமுகத்திற்கு போட்டியாக, குளச்சல் துறைமுகத்தை உருவாக்க, மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், மாநில அரசு போக்கு காட்டி வருவதோடு, மீனவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தின் பழமையான இயற்கை துறைமுகமாக, குமரி மாவட்டத்தில் உள்ள, குளச்சல் துறைமுகம் உள்ளது. நீண்ட காலமாகவே, இந்தத் துறைமுகம் முக்கியத்துவம் இழந்து காணப்படுகிறது. சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு மிகவும் உகந்ததாகவும், குமரியை, நாட்டின் முதல்நிலை மாவட்டமாக மாற்றவும், குளச்சல் துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மாற்றவும், மத்திய அரசு முயற்சித்து வருகிறது.’அடுத்த ஆண்டு முதல், குளச்சலில் வர்த்தக துறைமுகம் செயல்படும்’ என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, மத்திய அரசு, மாநில அரசிடம் தொடர்ந்து முறையிட்டு வருகிறது. ‘நிலப்பரப்பில், ஒரு சதுர அடி கூட வேண்டாம்; கடல் பகுதியிலேயே துறைமுகத்தை அமைக்க முடியும்’ என, மாநில அரசிடம் தெரிவித்துள்ளது.
குளச்சல் துறைமுகத்தின் சாத்தியக்கூறுகளை கண்டறிய, இரண்டு தனியார் நிறுவனங்கள், மார்ச்சில் ஆய்வு நடத்தின. குளச்சல் கடற்கரையில் இருந்து, 2 கி.மீ., நீளத்துக்கு பாலம் அமைத்து, நடுக்கடலில், 900 ஏக்கர் பரப்பளவில், செயற்கை நிலத்திட்டையை உருவாக்கி, சிங்கப்பூர் தொழில்நுட்பம் போன்று, கப்பல்களை நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. கிழக்கு ஆசியாவில் இருந்து வரும் கப்பல்கள், குளச்சல் துறைமுகத்தில் சரக்குகளை இறக்கிவிட்டு, மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஆப்ரிக்காவுக்கும் சரக்குகளை கப்பலில் ஏற்றிச் செல்ல முடியும். இதன் மூலம் சர்வதேச அளவில் சரக்குகளைக் கையாளுவதில் முன்னணியில் உள்ள கொழும்புவை, இந்தியா முந்த அதிக வாய்ப்புள்ளது.
குளச்சலில் துறைமுகம் அமைந்தால், அப்பெருமை தமிழகத்தைச் சேரும். இதனால், கன்னியாகுமரி மட்டுமல்லாமல் திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், மதுரை மாவட்டங்களும் வளர்ச்சி பெறும் என்கின்றனர் நிபுணர்கள். இதற்கிடையில், குமரி மாவட்ட மீனவர்கள், மீன்பிடித் துறைமுகம், மீன் பதனிடும் நிலையம் கட்டித்தரும்படி, தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை, அனைத்து கடலோரக் கிராமங்களிலும் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள, பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு, குளச்சல் துறைமுகம் முக்கிய வாழ்வாதாரமாக உள்ளது. ஏற்கனவே துாத்துக்குடி, விழிஞ்ஞம் வர்த்தக துறைமுகம் இருக்க, மேலும் குளச்சலையும் வர்த்தக துறைமுகமாக மாற்ற வேண்டாம் என்ற கருத்தும் நிலவுகிறது. குளச்சல் வர்த்தக துறைமுகமாக மாறினால், தங்களின் நலன் பாதிக்கும் என, மீனவர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து, மத்திய, மாநில அரசுகள், மீனவர்களின் கருத்தை கேட்டு, துறைமுகத்தை அமைக்க வேண்டியது அவசியம்.
இயற்கையாகவே ஆழமானது!
குளச்சல் துறைமுக சாத்தியக்கூறு குறித்து நிபுணர்கள் கூறியதாவது:ஆசியாவிலேயே, இயற்கையாக, 20 மீட்டர் ஆழத்துடன் அமைந்தது குளச்சல் துறைமுகம். மற்ற இடங்களில், துறைமுகம் அமைக்க வேண்டுமானால், 14 அடிக்கு ஆழப்படுத்த, பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்க வேண்டும்.ஆனால், குளச்சல் துறைமுகம், இயற்கையாகவே நல்ல ஆழத்தில் அமைந்துள்ளது. துாத்துக்குடி துறைமுகக் கடல் பகுதியை விட மிகவும் ஆழமானது. ஒரு கி.மீட்டருக்குக் குறைவான துாரத்திலேயே, 15 மீட்டர் ஆழம் உள்ளது. மேலும், குளச்சல் துறைமுகம் சர்வதேச கப்பல் வழித் தடத்திற்கு மிகவும் அருகில் உள்ளதால், கப்பல்கள் எளிதாக வந்து செல்லும். இவ்வாறு நிபுணர்கள் கூறினர்
Source: Dinamalar