ஆசியா கண்டத்திலேயே, குளச்சல் துறைமுகம் தான், இயற்கையான துறைமுகம். எனவே, அதை, மேம்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு மேற்கொள்ளும்,” என்று, அமைச்சர் நிதின் கட்காரி, உறுதியளித்தார்.
ராஜ்யசபாவில், வர்த்தக கப்பல் போக்குவரத்து திருத்த மசோதாவை, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கொண்டு வந்தார். அந்த மசோதா மீது காங்கிரஸ் சார்பில், சுதர்சன நாச்சியப்பன், பேசியதாவது: குளச்சல் துறைமுகத்தை, அரசு மேம்படுத்த வேண்டும். அங்கு, மாநில அரசு, நிறைய முதலீடு செய்துள்ளது. மத்திய அரசும், உதவி செய்ய வேண்டும். கொழும்பு துறைமுகத்துடன், போட்டிபோடும் அளவுக்கு வளரும், தூத்துக்குடி துறைமுகத்தை, மேலும் மேம்படுத்த வேண்டும். தவிர, ராமேஸ்வரத்துக்கும், இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில், சிறிய அளவிலான, கப்பல் போக்குவரத்து, துவங்க வேண்டும். தமிழகத்தின், மூக்கையூர் என்ற இடத்தில், காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்ட துறைமுகத்தை, புனரமைத்து, மேம்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, சுதர்சன நாச்சியப்பன், பேசினார்.
விவாதத்துக்கு பதில் அளித்து, அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில், ‘குளச்சல் துறைமுகம், மிக மிக, முக்கியமான துறைமுகம். ஆசியாவிலேயே, மிகவும் இயற்கையாக, 20 மீட்டர் ஆழத்துடன் அமைந்த துறைமுகம். மற்ற இடங்களில், துறைமுகம் அமைக்க வேண்டும் என்றால், அங்கு ஆழப்படுத்த பணிகளை மேற்கொண்டாக வேண்டும். 12 அடி அல்லது 14 அடி ஆழப்படுத்துவதற்கேகூட, பல ஆயிரம் கோடி, நிதி செலவிட வேண்டும். இந்நிலையில், குளச்சல் துறைமுகம், நல்ல ஆழத்தில் அமைந்துள்ளது; கைவசம் உள்ள, அந்த துறைமுகத்தை மேம்படுத்த, மத்திய அரசு உதவி செய்து, அதற்குரிய நடவடிக்கைகளை நிச்சயம் எடுக்கும்,” என்றார்