Tag Archives: fisherman

ஒக்கி புயலில் மாயமான மீனவர்களை விரைவாக மீட்கக்கோரி ரயில் மறியல்

nagercoil-protest

ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் மாயமாகியுள்ள மீனவர்களை விரைந்து மீட்கக்கோரி கன்னியாகுமரியில் 10,000-க்கும் மேற்பட்டோர் ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். மீட்புப்பணிகளில் அரசு மெத்தனமாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

‘ஒக்கி’ புயலால்  கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயலின்போது ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நடுக்கடலில் மாயமாகியுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை மீட்கும் பணியில்  இந்தியக் கடலோர காவல்படை கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 1,013 மீனவர்கள் கரை திரும்பவில்லை என்று மீனவக் குடும்பங்களும் பிரதிநிதிகளும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்துக் கூறும் அவர்கள், ”குமரி மாவட்ட மீனவர்கள் அனைவரும் ஆழ்கடலுக்குச் சென்று, அங்கேயே தங்கி மீன் படிப்பவர்கள்.குறிப்பாக தூத்தூர் சுற்றுவட்டாரப் பகுதி மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்கின்றனர்.

ஒக்கி புயல் குறித்த முறையான முன்னறிவிப்பு இல்லாததால், அவர்கள் கடலுக்குள் சென்று மாயமாகியுள்ளனர். அவர்களை மீட்பதில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது.

ஏராளமான மீனவர்கள் லட்சத்தீவுகளில், மகாராஷ்டிரத்தில் மற்றும் பல்வேறு இடங்களில் பத்திரமாக உள்ளதாக அரசு கூறுகிறது. ஆனால் அவர்கள் ஏன் இன்னும் ஊர் திரும்பவில்லை’’ எனக் கேள்வி எழுப்புகின்றனர்.

மாயமான 1,013 மீனவர்களை உடனடியாக மீட்க வேண்டும். மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஹெலிகாப்டர்கள், அதிவேக போர்க்கப்பல்களை பயன்படுத்தி, மீட்புப் பணியை விரைவுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

nagercoil-protest

இரு குழுக்களாகப் பிரிந்து போராட்டம்

இந்த போராட்டத்தில் இறையுமன்துறை முதல் இரவிக்குப்பன்துறை வரையுள்ள கடலோர கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். பாதிரியார்கள் ஆண்ட்ரோ மற்றும் ஹெவின்சன் தலைமையில் மீனவ குடும்பங்கள் தமிழக கேரள எல்லைப் பகுதியான சின்னத்துறையில் இருந்து குழித்துறையை நோக்கிப் பேரணி நடத்தி வருகின்றனர்.

நீரோடியில் இருந்து வல்லவிளை வரை உள்ள சுற்றுவட்டார கிராம மீனவ மக்கள், கொல்லங்கோட்டில் இருந்து குழித்துறையை நோக்கி  சென்றனர். இரண்டு தரப்பிலும் இருந்து சுமார் 10,000 பேர் இந்தப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

முன்னதாக குழித்துறை ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அவர்கள் அறிவித்திருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தடையை மீறி குழித்துறை ரயில் நிலையத்துக்குள் நுழைந்த மீனவ குடும்பங்கள், ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

Source : Tamil Hindu

http://tamil.thehindu.com/tamilnadu/article21288253.ece