Tag Archives: Heavy rain

Heavy rain in kanyakumari district

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

 தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விடாமல் கன மழை கொட்டி வருவதால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
 
நாகர்கோவில், குளச்சல், கொட்டாரம் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பலத்த மழை காரணமாக பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் மழையின் காரணமாக வள்ளியாறு, பரளியாறு, குழித்துறையாறு, சுசீந்திரம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது.
தொடர் கன மழை காரணமாக மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தவிப்பு 
குமரியில் பெய்து வரும் தொடர்மழையினால் மார்த்தாண்டம், ஆரல்வாய்மொழி, திட்டுவிளை, தோவளை, இராமனாதிச்சன்புதூர் உள்ளிட்ட இடங்களில் செங்கல்சூளை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர்.
வேலையிழப்பு 
குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தற்போது பால்வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
 திற்பரப்பு அருவியில் வெள்ளம் 
குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை ஆகிய பகுதிகளில் பெய்த மழையினால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருவியில் குளிக்கசுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியூர்களிலிருந்து அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
 படகு போக்கு வரத்து நிறுத்தம்
 கன்னியாகுமரி கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Heavy rain lashes Kumari District

குமரி மாவட்டத்தில் 2–வது நாளாக கனமழை கொட்டியதால் கொட்டாரத்தில் 12½ செ.மீ. மழை பதிவானது. மேலும் தாழ்வான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

கனமழை

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை மழை பெய்து வந்தது. இதனால் வாட்டி வதைக்கும் கத்திரி வெயிலின் தாக்கமே குமரி மாவட்டத்தில் இல்லாமல் போனது. இதற்கிடையே லட்சத்தீவு மற்றும் கேரளா பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டிருந்ததைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினத்தில் இருந்து விட்டு– விட்டு கனமழை பெய்து வருகிறது.

நேற்று 2–வது நாளாகவும் இந்த மழை தொடர்ந்தது. நேற்று முன்தினத்தைக் காட்டிலும் நேற்று இடி– மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. 15 நிமிடம் அல்லது அரை மணி நேர இடைவெளியில் நாள் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்தால் நாகர்கோவில் நகரில் உள்ள கேப்ரோடு, செம்மாங்குடி ரோடு, மீனாட்சிபுரம் ரோடு, கோட்டார் ரெயில்வே ரோடு, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி ரோடு, செட்டிகுளம் சந்திப்பு ரோடு, கோர்ட்டு ரோடு, ஒழுகினசேரி ரோடு, வடசேரி ரோடு, வெட்டூர்ணிமடம் ரோடு உள்ளிட்ட நகரின் அனைத்து சாலைகளிலும் மழை வெள்ளம் காட்டாற்று வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் சாக்கடை கால்வாய்கள், மழைநீர் வடிகால்கள் அமைந்துள்ள தெருக்கள் அனைத்திலும் கால்வாய்கள் மற்றும் வடிகால்களை மூழ்கடித்தபடி வெள்ளம் பாய்ந்தோடியது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். சில பகுதிகளில் பாய்ந்தோடிய வெள்ளம் ஆட்டோக்களை கவிழ்க்கும் வகையில் ஓடியது.

வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

மேலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தன. நாகர்கோவில் ஏழகரம் ராமர்காலனி பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்து விட்டது. இதனால் அந்த வீடுகளைச் சேர்ந்தவர்கள் அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று குடியேறினர்.

நாகர்கோவில் செந்தூரான் நகர் 5–வது தெரு பகுதியில் செட்டிகுளம் வாய்க்கால் தண்ணீர், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடாமல் தடுப்பதற்காக தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழையின்போது சீறிப்பாய்ந்து வந்த மழை வெள்ளம் அந்த தடுப்புச்சுவரின் 200 அடி நீளத்துக்கு உடைத்து குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. தற்போது  2 நாட்களாக பெய்து வரும் கனமழையினால் ஏற்கனவே உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் புகுந்த பகுதியில் நேற்று அதிகாலை சுமார் 3 மணிக்கு மீண்டும்  வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளம் அப்பகுதியில் உள்ள வீடுகளின் வெளி வாசல் வரை சென்று நின்றது. இதனால் மக்கள் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்து விடுமோ? என்ற அச்சத்துடன் தூங்காமல் விடிய– விடிய விழித்திருந்தனர்.

இதேபோல் காந்தி காலனி, செட்டிகுளம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர், பறக்கிங்கால், ஆஸ்ராமம், கரியமாணிக்கபுரம் போன்ற பகுதிகளில் வெள்ளக்காடாய் காட்சி அளித்தது. இந்த மழை தொடர்ந்து பெய்தால் மேற்கண்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ளம் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்தப்பகுதி மக்கள் எப்போது வெள்ளம் புகுமோ? என்ற அச்சத்துடனேயே வீடுகளில் வசித்து வருகின்றனர். மேலும் பழையாறு உள்ளிட்ட ஆறுகளிலும், பாசன வாய்க்கால்களிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பெரும்பாலான குளங்களும் நிரம்பி வருகின்றன.மழையால் பார்வதிபுரம் பகுதியில் மரக்கிளை ஒன்று முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. போலீசார் வந்து அதனை அகற்றியதும் போக்குவரத்து சீரானது.

12½ செ.மீ. மழை

நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:–

பேச்சிப்பாறை– 57.2, பெருஞ்சாணி– 37.8, சிற்றார் 1– 38.8, சிற்றார் 2– 42.4, பொய்கை– 14.2, மாம்பழத்துறையாறு– 76, முக்கடல்– 95, நாகர்கோவில்– 114.2, பூதப்பாண்டி– 38, சுருளோடு– 51.4, கன்னிமார்– 72.5, ஆரல்வாய்மொழி– 14.2, பாலமோர்– 21.5, மயிலாடி– 79.6, கொட்டாரம்– 125.8, இரணியல்– 7, அடையாமடை– 93, குளச்சல்– 32, குருந்தங்கோடு– 66.6, அடையாமடை– 41, கோழிப்போர்விளை– 82, திற்பரப்பு– 95 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது. இதில் அதிகபட்சமாக கொட்டாரம் பகுதியில் 12½ செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

முக்கால் அடி உயர்வு

இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீரின் அளவு பலமடங்கு அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 729 கன அடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 166 கன அடி தண்ணீரும், சிற்றார்–1 அணைக்கு 99 கன அடி தண்ணீரும், சிற்றார்–2 அணைக்கு 135 கன அடி தண்ணீரும், மாம்பழத்துறையாறு அணைக்கு 15 கன அடி தண்ணீரும் வந்து கொண்டிருந்தது.

எனவே பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 35.30 அடியாகவும், பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 63.85 அடியாகவும், சிற்றார்–1 அணை நீர்மட்டம் 13.91 அடியாகவும், சிற்றார்–2 அணை நீர்மட்டம் 14 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 7.90 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 54.12 அடியாகவும், முக்கடல் அணை நீர்மட்டம் 4.70 அடியாகவும் இருந்தது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவுடன் இருப்பதால் அணைக்கு வரும் 15 கனஅடி தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 3.90 அடியாக இருந்தது. மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஒரே நாளில் முக்கால் அடிக்கு மேல் உயர்ந்து நேற்று 4.70 அடியாக உயர்ந்தது.