Tag Archives: malayalam

Malayalam is gradually eliminating from Kanyakumari

தமிழைப் போன்றே மலையாளமும் குமரி மாவட்டத்தின் அடையாளம்!

kanyakumari

தமிழும் மலையாளமும் இரண்டறக் கலந்த குமரி மாவட்டத்தில் மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் தமிழைத் திணிப்பது, குமரி மாவட்டத்திலிருந்து மலையாளத்தை அழித்தொழிப்பதற்குச் சமம். குமரி மாவட்ட கலாச்சார அடையாளங்களை நசுக்குவது போன்றது அது!

குமரி மாவட்டத்தில் பல தலைமுறைகளாக வசித்து வரும் மலையாளிகள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம்குறித்துக் கவலைப்படும் சூழல் தற்போது உருவாகியிருக்கிறது. நேற்றுவரை மலையாளத்தில் பாடம் படித்துவந்த அக்குழந்தைகள், வேறுவழியில்லாமல் தமிழ் வழியில் பாடம் படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இப்படியான ஒரு பிரச்சினை இருக்கிறது என்று பலருக்குத் தெரியாது என்பதுதான் வேதனை. இதுதொடர்பாக நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “நாமத்தான் தமிழ்நாட்டுக்க கூட சேந்தாச்சி இல்லியா… இனி எதுக்கு மலையாளம் படிச்சிக் கொடுக்கணும்? மலையாளம் படிக்க இஷ்டம் உள்ளவிய கேரளத்துக்குப் போகட்டு” என்றார். மாட்டுக்கறி உண்பவர்கள் பாகிஸ்தானுக்குச் செல்லட்டும் என்று சொன்ன முக்தர் அப்பாஸ் நக்வியும், கிரிராஜ் சிங்கும்தான் நினைவுக்கு வந்தனர்.

தமிழைப் போன்றே மலையாளமும் குமரி மாவட்டத்தின் அடையாளம் என்பதைப் பார்க்க மறுப்பதன் உச்ச குரலே மேற்சொன்ன வாதம். உண்மையில், குமரி மாவட்டத்தில் மலையாள மொழியும் செந்தமிழும் கோலோச்சி, மாவட்டத்தின் பெருமைகளை உலகுக்குப் பறைசாற்றிக்கொண்டிருக்கின்றன. ஆனால், வரலாற்று பூர்வமான இந்த உண்மைகளை நாம் அறியாமல் இருக்கிறோம். இளைய சமூகத்தினரிடம் இம்மாவட்ட வரலாறு தொடர்பான புரிதல் இல்லை என்பதுதான் அடிப்படைப் பிரச்சினை. குறிப்பாக, தமிழகப் பள்ளிப் பாடப் புத்தகங்களில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அய்யா வைகுண்டரைப் பற்றிய வரலாறோ, தோள் சீலைப் போராட்டம்பற்றிய குறிப்புகளோ இல்லை. புதிய தலைமுறையினர், வேறு வழிகள் மூலம் அரைகுறை யாக அறிந்த்கொள்ளும் தகவல்கள் கூட, ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அமைந்தவையாகவோ மிகைப்படுத்தப் பட்டவையாகவோ உள்ளன.

உறுதிசெய்யப்பட்ட ஒற்றுமை

1956 வாக்கில் குமரி மாவட்டத்தைத் தாய்த் தமிழகத்துடன் இணைக்கக் கேட்டுத் தீவிரப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, அதை மலையாள மொழிக்கு எதிரான போராட்டமாகத் திசைதிருப்பும் முயற்சி நடந்தது. இம்மாவட்டத்தில் பல ஆண்டுகாலம் வாழ்ந்துவந்த மலையாளிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் சூழல் உருவானது. மார்த்தாண்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகத் தீவிரமாக இருந்த இத்தகைய போக்கு, மறைந்த முன்னாள் விளவங்கோடு எம்.எல்.ஏ-வான டி. மணியின் பெரு முயற்சியால் கைவிடப்பட்டது. அவரது தலைமையில் ‘ஐக்கிய கேரளம் ஜிந்தாபாத், ஐக்கிய தமிழகம் ஜிந்தாபாத்’ என்று ஒற்றுமைக்கான கோஷம் மார்த்தாண்டம், அருமனை மேல்புறம் பகுதிகளின் தெருக்களில் கேட்டது. குமரி மாவட்டத்தில் இருந்த மலையாளிகளும் தமிழர்களும் ஒற்றுமையுடன் வாழ்வதை இந்த கோஷம் உறுதிசெய்தது.

தொடர்ந்து, மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர், அந்தந்தப் பகுதிகளில் வாழும் சிறுபான்மை மொழி பேசும் மக்களின் உரிமைகள்பற்றிய பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து பல்வேறு குழுக்களை அமைத்து ஆய்வு செய்தது மத்திய அரசு. அந்தக் குழுக்களின் அறிவுறுத்தலின்படி 1965-ல் தமிழக அரசு, குமரி மாவட்டத்தில் சிறுபான்மை மொழிகள் பேசும் மக்களின் மொழியுரிமையைப் பாதுகாக்கவும், அவர்களின் கலாச்சாரம், வழிபாட்டு உரிமைகளை உறுதிப்படுத்தவும் வழிவகை செய்யும் அரசாணை ஒன்றை வெளியிட்டது.

தமிழ் கற்பித்தல் சட்டம்

இந்நிலையில், கடந்த 2014-15-ம் கல்வியாண்டு இறுதித் தேர்வின்போது மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. மலையாள மொழி மட்டுமே அறிந்த மாணவர்களுக்குத் தமிழில் அச்சடிக்கப்பட்ட கேள்வித்தாள்கள் வழங்கப் பட்டன. இவ்விஷயம் சர்ச்சைக்குள்ளானபோது, 2006-ல் தமிழக அரசு கொண்டுவந்த ‘தமிழ் கற்பித்தல் சட்ட’த்தையே நடைமுறைப்படுத்தியதாக விளக்கம் தரப்பட்டது. இந்தச் சட்டம், தமிழையும் ஆங்கிலத்தையும் கட்டாயப் பாடமாகவும், அவரவர் தாய்மொழியை விருப்பப் பாடமாகவும் கற்றுக்கொடுக்கக் கூறுகிறது. இது தாய்மொழிக் கல்வியைச் சிதைத்துவிடும் என்ற அச்சம், தமிழ் தவிர வேறு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களிடம் உண்டாகியிருக்கிறது.

மறுக்கப்படும் உரிமை

குமரி மாவட்டத்தில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மாணவர்கள் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். விருப்பப் பாடமாக மலையாளம் இருக்கும் சூழலில் வேறொரு சிக்கலையும் அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது. பல அரசு மற்றும் தனியார் பள்ளி நிர்வாகங்கள் செலவைக் குறைக்கும் நோக்கில் மலையாள மொழி கற்பிக்கும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. இதன் மூலம், தாய்மொழியில், குறிப்பாக மலையாளத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் உரிமை மறுக்கப்படுகிறது. இந்தச் சட்டம் 1965-ல் வெளியிடப்பட்ட அரசாணையை மீறும் வகையில் உள்ளது.

குமரியின் பூர்வகுடிகள்

குமரி மாவட்டத்தில், மலையாள மொழிக்கு எதிரான மனப்பான்மை கொண்டவர்கள், அது நாயர் சமூகத்தினருக்கு மட்டுமேயான மொழி என்பதுபோல் வாதிடுகிறார்கள். உண்மை அதுவல்ல. மாவட்டத்தின் மேற்குப் பகுதிகளில் வசிக்கும் சில கடற்கரையோர கிராமங்களிலும், ஈழவர், தலித் ஏன் நாடார் சமூகங் களிலும்கூட கணிசமான எண்ணிக்கையில் மலையா ளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் உள்ளனர். இன்றும் குமரி மாவட்டத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் மலையாள மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. இவர்கள் அனைவருமே தலைமுறை தலைமுறையாக குமரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இப்படியான ஒரு அசவுகரிய சூழலில், தமிழைப் போன்றே மலையாள மொழியும் குமரி மாவட்டத்தின் தனித்தன்மைகளில் ஒன்றாக உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

குமரி மாவட்டத்தைத் தாய்த் தமிழகத்துடன் இணக்கக் கோரி நடந்த போராட்டத்தின்போது, மார்த்தாண்டத்தில் நடந்த போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் முதலில் பலியான பப்பு பணிக்கர் ஒரு மலையாளி. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையும், செய்குத்தம்பி பாவலரும் குமரி மாவட்டத்தின் பெயரைத் தமிழ் உலகுக்கு அறியச் செய்தவர்கள் என்றால், மலையாளத்தில் அம்சி நாராயண பிள்ளையும், தனது ஊரின் பெயரை வைத்தே அறியப்படும் திருநயினார்குறிச்சியும், ரமேசன் நாயரும் குமரி மாவட்டத்தின் பெயரை மலையாள உலகம் அறியச் செய்தவர்கள்.

இவர்களில் அம்சி நாராயணபிள்ளை எழுதிய ‘வரிக வரிக சகஜரே, சகன சமர சமயமாய்’ எனும் பாடல், ஆங்கிலேயே ஆட்சியை எதிர்த்து கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களால் பாடப்பட்ட உணர்ச்சிமிக்க பாடல். திக்குறிச்சி சுகுமாரன் நாயரும், குலசேகரத்தை அடுத்த கமுகறை புருஷோத்தமன் நாயரும் மலையாளத் திரையுலகில் குமரி மாவட்டத்தின் பெருமையை நிலைபெறச் செய்தவர்கள். இன்றைய மலையாள சினிமாவின் தந்தை எனப் போற்றப்படும் ஜே.சி.டேனியல் கூட அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த தமிழர்தான்!

தவிர்க்கப்பட வேண்டிய திணிப்பு

தமிழும் மலையாளமும் இரண்டறக் கலந்த குமரி மாவட்டத்தில் மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களிடம் தமிழைத் திணிப்பது, குமரி மாவட்டத்திலிருந்து மலையாளத்தை அழித்தொழிப்பதற்குச் சமம். குமரி மாவட்ட கலாச்சார அடையாளங்களை நசுக்குவது போன்றது அது. தமிழக அரசு இதைச் செய்யுமானால், பிற மொழித் திணிப்புகளை எதிர்ப்பதற்குத் தார்மீகரீதியாக எந்த உரிமையும் அதற்கு இல்லை என்றே அர்த்தமாகும்.

ஜான் மோசஸ் ராஜ்,

தொடர்புக்கு: johnmosesraj@gmail.com

Source : tamilhindu