Tag Archives: marthandam railway station

மார்த்தாண்டம்– ரெயில்நிலையம் சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணியை பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு

Marthandam:ரெயில் நிலையம் சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணி மீண்டும் தொடங்கியபோது பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலைப்பணி

மார்த்தாண்டம்   பஸ் நிலையம் அருகில்  இருந்து குழித்துறை ரெயில் நிலையம் வழியாக ஐரேனிபுரத்திற்கு ஒரு சாலை செல்கிறது இந்த    சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. இதற்காக மார்த்தாண்டத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை 500 மீட்டர் தூரம் சிமெண்டு தளம் அமைக்கவும், ரெயில் நிலையத்தில் இருந்து ஐரேனிபுரம் வரை தார்தளம் அமைக்கவும் நெடுஞ்சாலைதுறை சார்பில் ரூ. 1 கோடி அனுமதிக்கப்பட்டது.

அதன்படி ரெயில்நிலையம் பகுதியில் இருந்து ஐரேனிபுரம் வரை சாலையில் தார்போடும் பணி நடந்து முடிந்தது. மார்த்தாண்டத்தில் இருந்து ரெயில் நிலையம் வரை சிமெண்டு  தளம் போட பணிகள் தொடங்கப்பட்டது. அப்போது, அந்தபகுதியில் கழிவுநீர் ஓடை அமைக்கவும், பக்க ஓடைகள் தரமானதாக  அமைக்கவும் வலியுறுத்தி பொது மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் வேலை நிறுத்தப் பட்டது.

மீண்டும் தொடங்கியது

அதன் பின்னர், நேற்று மார்த்தாண்டம் ரெயில் நிலைய சாலை தொடங்கும் இடத்தில் சாக்கடை கால்வாய்  இணைப்பிற்காக சிமெண்டு குழாய் பதித்து சாலை பணி மீண்டும் தொடங்கப்பட்டது.

ஆனால், சிமெண்டு குழாய் போடுவதால் தரம் இருக்காது எனக்கூறி அந்த பகுதி மக்களும், ரெயில் நிலைய ஆட்டோ டிரைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து பணியை தடுத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

அதைத்தொடர்ந்து நெடுஞ்சாலை உதவி பொறியாளர் ராமச்சந்திரன், நல்லூர் பேரூராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். பின்னர், கழிவுநீர் ஓடையில் சிமெண்டு குழாய் பதிக்கும் பணியும், சாலையில் சிமெண்டு தளம் அமைக்கும் பணியும் தொடங்கியது.

Source : Daily thanthi