Tag Archives: nagercoil municipality

பேருந்துநிலையங்களை தனியார்மயமாக்க தேவையில்லை!-வழிகாட்டும் நாகர்கோயில் நகராட்சி!

nagercoilinfo

“உள்ளாட்சி அமைப்புகள் நிதிச்சுமையில் தத்தளிப்பதால் பேருந்துநிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்போகிறோம்” என்ற தமிழக அரசின் அறிவிப்பு பலத்த சர்ச்சை விவாதங்களை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில், “உள்ளாட்சி அமைப்புகளில் நடக்கும் முறைகேடுகளை சரிசெய்து வருமானத்தை பெருக்கினால்… அரசாங்கமே பேருந்துநிலையங்களை சிறப்பாக நடத்திட முடியும்” என்று உணர்த்தியதோடு உயர்நீதிமன்றத்தால் பாராட்டையும் பெற்றிருக்கிறது நாகர்கோயில் நகராட்சி.

“பேருந்து நிலையங்களை தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால் அங்கு விற்பனை செய்யும் பொருட்களின் விலையை இஷ்டத்துக்கு உயர்த்தி விற்பனை செய்வார்கள். பேர்ந்து நிலையத்தில் நிற்பதற்குக்கூட கட்டணம் வசூலிக்கும் அவலநிலை வரலாம். இதன்மூலம், பேருந்து போக்குவரத்தை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்” என்றக் குமுறல் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வெடித்துக்கொண்டிருக்க, நீதிமன்றமே பாராட்டும் அளவிற்கு நாகர்கோயில் நகராட்சி அப்படியென்ன செய்திருக்கிறது?

இதுகுறித்து, சட்டப்போராட்டத்தில் ஈடுபட்டுவரும் உச்சநீதிமன்ற பிரபல வழக்கறிஞர் பொ.சோமசுந்தரம் நம்மிடம், “உள்ளாட்சி அமைப்புகள் நிதிச்சுமையில் தத்தளிப்பதால்தான் பேருந்து நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது தமிழக அரசு. ஆனால், நாகர்கோயிலிலுள்ள பேருந்துநிலைய வருமானம் கடந்த வருடங்களைவிட இந்த வருடம் 4 மடங்காக அதிரிகரித்திருக்கிறது. இப்படி, தமிழகம் முழுக்க உள்ள பேருந்துநிலையங்களில் நியாயமான வாடகைகளை வசூலித்து வருமானத்தை பெருக்கினாலே தனியாரைவிட சிறப்பாக நடத்துவதோடு பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்” என்று ஆச்சர்யப்படுத்துகிறவர், அதுகுறித்து நம்மிடம் விளக்கினார்.

“நாகர்கோயில் நகராட்சிக்குட்பட்டு சுமார் 343 கடைகள் உள்ளன. இந்த, கடைகளை குறைந்த வாடகைக்கட்டணத்தில் வாடகைக்கு எடுத்தவர்கள் பெரும்பாலானோர் பல மடங்கு கூடுதல் கட்டணத்திற்கு உள்வாடகை விட்டுக்கொண்டிருப்பது நடைமுறையில் உள்ளது. 2018 மார்ச்-31 ந்தேதி  கடைகளின் வாடகை ஒப்பந்தம் முடிவடைவதால் மூன்று மாதத்திற்கு முன்பே அதாவது 2017  டிசம்பர்-28 ந்தேதி நகராட்சி நிர்வாகத்தால் ஏலம் அறிவிக்கப்பட்டது.

5,000 ரூபாய்க்கு கடையை வாடகைக்கு எடுத்துவிட்டு, மாதம் 2 லட்சரூபாய்வரை எல்லாம் உள்வாடகைக்கு விடுகிறார்கள். அதற்கு, நேரடியாகவே ஏலம் எடுத்து நகராட்சி நிர்வாகத்திற்கு வாடகை கொடுத்துவிடலாம். இதன்மூலம், உள்வாடகைக்கு இருக்கிறோம் என்ற பயமும் பதட்டமும் இல்லாமல்  உரிமையாளர்கள் என்ற எண்ணம் ஏற்படும். எப்போது, விரட்டிவிட்டு வேறு யாரையாவது கொண்டுவந்துவிடுவார்கள் என்று உள் வாடகைக்குவிட்டவர்களுக்கும் பயப்படத்தேவையில்லை.  இதைவிடக்கொடுமை, நாகர்கோயில் பேருந்துநிலையத்திலுள்ள கடைகளுக்கு முன்பு ஒருமுறை ஏலம் விடப்படப்போது, தனியார் கடைகளுக்கு 30 சதவீதம் வாடகை ஏற்றமும் போக்குவரத்துத்துறை அலுவகத்திற்கு 100 சதவீத வாடகை ஏற்றமும் இருந்ததை சுட்டிக்காட்டி போக்குவரத்துறைதான் மக்களுக்கு சேவை செய்துகொண்டிருக்கிறது அதற்கு 100 சதவீதம் வாடகையை பாகுபாடாக கூட்டியிருக்கிறீர்களே என்று உயர்நீதிமன்ற மிகுந்த வருத்தம் தெரிவித்தது.

அரசாங்கத்தின் இடத்திலேயே உள் வாடகையில் இருக்கும் கடைக்காரர்கள் கொடுக்கும் வாடகை, பேருந்துநிலையத்தில் விற்பனையில் கிடைக்கும் வருமானம் இதையெல்லாம் கருத்தில்கொண்டு கடைகளின் மாத வாடகையை  அதிரடியாக உயர்த்தி ஏலம் விட்டார்கள்.

இதனால், நாகர்கோயில் நகராட்சி கடைகள் மூலம் 1 கோடியே 2 லட்சத்து 12 ஆயிரத்து 144 ரூபாய் மட்டுமே வந்துகொண்டிருந்த வருட வருமானம் தற்போது 4 கோடியே 62 லட்சத்து  6 ஆயிரத்து 564 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அதேபோல், கடைக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்படும் டெபாசிட்  தொகையும்  8 கோடியே 92 லட்சத்து  6 ஆயிரத்து 564 ரூபாயாக அதிகரித்திருக்கிறது.

மேலும்,‘ஏற்கனவே, இருந்த கடைக்காரர்களுக்கே வாடகைக்கு விடவேண்டும். அதுவும், பழைய தொகையிலேயே வாடகைக்கு விடவேண்டும்’ என்று பழைய வாடகைக்கடைக்காரர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்தார்கள். அப்போதுதான்,  ‘நகராட்சி நிர்வாகம் கடைகளுக்கான வாடகையை உயர்த்தியது சரியே. இந்த, நகராட்சி நிர்வாகம்போல் ஆங்காங்கேயுள்ள ஒரு சில நகராட்சி நிர்வாகங்கள் விதி விலக்குகளே’ என்று பாராட்டியதோடு நாகர்கோயில் நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக பொதுநல வழக்கு தொடுத்தவருக்கு 25,000 ரூபாய் அபராதமும் விதித்து வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது” என்றார்.

நாகர்கோயில் நகராட்சிபோல உள்ளாட்சி அமைப்பிலுள்ள ஒவ்வொரு நகராட்சியும் மாநகராட்சியும் முறைகேடுகளை தடுத்து வரி, வாடகைகளை  முறையாக வசூலித்தாலே தமிழகத்திலுள்ள எந்த பேருந்துநிலையத்தையும் தனியாரிடம் தாரை வார்க்காமல் அரசாங்கமே திறம்பட நடத்தமுடியும்.

Source : https://nakkheeran.in/24-by-7-news/thamizhagam/no-need-privatize-bus-stations-municipal-corporation-nagercoil