நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது
கோடைகாலத்தில் முக்கடல் அணை நிரம்புவது 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நிகழ்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தேவைக்கான ஒரே ஆதாரம் முக்கடல் அணை. குடிநீருக்காகவே பயன்படுத்தப்படும் ஒரே அணையும் இதுதான். நாகர்கோவிலில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த அணை மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் 3 பக்கம் மலைகளால் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 25 அடி ஆகும்.
25 அடி என்பது அணையின் தரைமட்ட அளவில் இருந்து கணக்கிடப்பட்ட ஆழம் அல்ல. 25 அடிக்கும் கீழே மைனஸ் நிலையில் 20 அடி ஆழம் உள்ளது. 25 அடிக்கும் கீழே நீர்மட்டம் குறையும்போது நீர் கலங்கலாக இருக்கும். சேறும், சகதியுமாக இருக்கும். எனவே, அணையின் நீர்மட்டம் 25 அடி என்றே கருதப்படுகிறது.
இந்த 25 அடி கொள்ளளவையும் முக்கடல் அணை ஆண்டுதோறும் எட்டுவது இயல்புதான் என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் அது நிறைவேறாமலும் போயிருக்கிறது. இந்த நிலையில் முக்கடல் அணையின் நேற்றைய நீர்மட்டம் 21.10 அடியாகும். இது, அணையின் வரலாற்று பதிவுகளில் குறிப்பிடத்தக்கதான நீர்மட்டம் ஆகும்.
21 அடியை தாண்டியது அதாவது, தென்மேற்கு பருவமழை காலத்தில்தான் முக்கடல் அணை, முழு கொள்ளளவான 25 அடியை எட்டுவது வழக்கம். ஆனால் கோடை காலத்தில் 20 அடியை தாண்டுவது என்பது எப்போதாவது நிகழும் சம்பவம். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இதைப்போல கோடைகாலத்தில் நீர்மட்டம் 21 அடியை தாண்டி இருக்கிறது. அந்த நிலை அணையில் தற்போது நிகழ்ந்திருக்கிறது. அணையின் நேற்றைய நீர்மட்டம் 21.10 அடியாகும். கடந்த சில ஆண்டுகளில், கோடைகாலத்தில் முக்கடல் அணையில் தண்ணீர் வற்றி நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் இன்னல்பட்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டு நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடே இல்லாமல் கோடைகாலம் முடிய இருப்பதையும், அதே நேரத்தில் முக்கடல் அணையில் நீர்மட்டம் 21 அடியை தாண்டியதை எண்ணியும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே நேரத்தில், அணை வற்றும்போது அணையை தூர்வாரி தண்ணீர் கொள்ளளவை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
Source : Dinathanthi