வேப்பின் பல பயன்களை பற்றி அறிந்திருப்போம். வேப்பிலையை வேறு எந்த மாதிரி எல்லாம் உபயோகப்படுத்தலாம் என இங்கே பார்க்கலாம். பித்த பிரச்சனை மற்றும் கிருமியால் அவதி படுபவர்கள் வேப்பம்பூவை ரசம் வைத்து சாப்பிடுவது மிகவும் நல்லது. அவ்வாறு சாப்பிட்டால் உடலில் ஏற்படும் அதிகப்படியான பித்தம் குறைகிந்துவிடும். உடலில் உள்ள ஒரு சிறு கிருமிகளும் அழிந்து விடும்.
வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி மஞ்சள் தூளுடன் கலந்து தேய்த்துக் குளித்து வந்தால் தோல் வியாதி நீங்கிவிடும். அந்த பொடியை தணலில் போட்டு வீடு முழுவதும் புகையை பரவ விட்டால் விஷப்பூச்சிகள், கொசு, மூட்டைபூச்சி தொல்லைகள் ஓழிந்துவிடும். தினமும் வேப்ப இலைகளை நீரில் போட்டு வைத்து விட்டு ஒரிரு மணி நேரம் கழித்து குளிக்க தோல் வியாதியே வராமல் இருக்கும். வேப்ப இலை கொத்துகள் நான்கை எடுத்து தண்டு மட்டும் வெண்ணீரில் படுமாறு செய்து கால்மணி நேரம் ஊறவையுங்கள். பிறகு அந்த சாற்றை இரண்டு நாட்கள் குடித்து வர வயிற்று எரிச்சல் நிற்கும்.
வேப்பிலை சாற்றை எடுத்து மோருடன் கலந்து சாப்பிட வயிற்று பூச்சிகள் ஓழியும். வேப்பம் பூவை லேசாக வாட்டி தலையில் கட்டிக் கொண்டால் பேன், பொடுகு, ஈறு போன்றவை அகன்று விடும். வேப்பிலைக் கொழுந்தை தினமும் பச்சையாகச் சிறிதளவு மென்று வந்தால் வயிறு சம்பந்தமான தொல்லைகள் வரவே வராது. வேப்பிலைக் கொழுந்தை இடித்து சாறு பிழிந்து அதில் சிறிது தேனைச் சேர்த்து இரவு உணவுக்குப் பின் சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் இறந்தோ உயிருடனோ உடலை விட்டு வெளியேறிவிடும்.
வேப்பமரம் நட்டு வைத்தால், வைத்தியர் தேவையில்லை!
நம் தேசத்தில் பாரம்பரிமாக, குறிப்பாக தமிழகத்தில் பல்வேறு ஆன்மீக சடங்குகளில் மட்டுமல்லாது, நோய்தீர்க்கும் மூலிகையாகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருவது வேம்பு! வயிற்றிலிருக்கும் பூச்சியை வெளியேற்றுவதற்கு சிறுபிள்ளைகளை மடக்கிப்பிடித்து, சங்கில் வைத்து வேப்பிலைச் சாற்றை ஊற்றிவிடும் அக்காமார்களை இன்றும் நம் கிராமங்களில் பார்க்கமுடியும்.
வேப்பிலையைப் பற்றி சத்குரு அவர்கள் சொல்லும்போது, அபாரமான சக்தியைக் கொண்டது வேப்பிலை என்று குறிப்பிடுகிறார். ஈஷா யோகா மையத்தில் தினமும் காலையில் யோகப் பயிற்சிகளுக்கு முன்பு அனைவரும் சுண்டைக்காய் அளவு வேப்பிலை மற்றும் மஞ்சள் உருண்டைகளை உட்கொள்கின்றனர்.
கிராமங்களில் இன்றும் பூராண்-தேள் போன்ற விஷக்கடிகளுக்கு கூட, கடிபட்ட இடத்தில் வேப்பங்குலைகளை வருடி ‘பார்வை பார்த்தல்’ என்ற பெயரில் வைத்தியம் செய்வார்கள். ஆனால், இதெல்லாம் மூடநம்பிக்கைகள் என பொத்தாம் பொதுவாக ஒதுக்கி வைத்துவிட முடியுமா என்பதை அறிவியலும் மக்களும்தான் முடிவு செய்ய வேண்டும்!
ஏதோவொரு காரணத்தால் உடல் மற்றும் மனநிலையில் சோர்வு அல்லது பாதிப்பு ஏற்படும்போது அந்த மனிதருக்கு வேப்பிலை படுக்கையில் இருக்கும்போது, அவருக்குள் ஒருவித புத்துணர்ச்சி பிறக்கிறது. மேலும், வேப்ப மரம் தரும் நிழல் ஆரோக்கியம் தருவதாகவும் இருக்கிறது. நம் ஊர் அம்மன் கோயில்களில் வேப்பிலைகள் பிரசாதமாகவும் வழங்கப்படுகிறது.
வேப்பிலைகள் மட்டுமல்லாமல், வேப்ப மரத்தின் பூ, காய், பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் கொண்டவையே! தொற்றுநோய்கள் கிராமங்களைக் காட்டிலும் நகரங்களில் விரைவாகப் பரவுவதற்கு காரணம், வேப்பமரங்கள் குறைவாக இருப்பதுதான். வேப்பமரத்திலிருந்து வீசும் காற்று ஒருவித மருத்துவகுணம் வாய்ந்ததாகும். இதன்மூலம் சுற்றுச்சூழலிலுள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் அழிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. நம் அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு வேப்பமரம் இருப்பது அனைவரின் வீட்டின் முன்பும் ஒரு மருத்துவர் இருப்பதற்கு சமம்தான்.
கோடை காலத்தில் வேப்ப மரங்கள் தழைத்து வளருகின்றன. தழைத்து நிற்கும் பசுமையான வேப்பமரங்களை தினந்தோறும் பார்க்கும்போது கண்களுக்கு குளிர்ச்சி உணடாகுமென நாட்டு வைத்தியத்தில் சொல்கிறார்கள். இப்படியாக நாம் வேப்ப மரங்கள் உள்ள சூழலில் வாழ்வதால் உண்டாகும் நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதில் முக்கியமாகச் சொல்ல வேண்டியது, அக்னி நட்சத்திரம் போன்ற சூழ்நிலையில் வேப்ப மரங்கள் தரும் குளிர்ச்சியான நிழல் ஒரு வரபிரசாதம்! கொளுத்தும் வெயிலில் நூறு மீட்டர் நடப்பதற்குள் அங்கே இடையில் ஒரு வேப்பமரம் ரோட்டோரமாக நின்றிருந்தால், அதைவிட ஒரு சொர்க்கம் இருக்காது என்பது அனுபவித்து பார்த்தவர்களுக்கு நன்றாக விளங்கும்.
நாம் ஆளுக்கொரு வேம்பு நட்டு வளர்த்தால், ஆரோக்கியமான வருங்கால தலைமுறைகளைப் பெறமுடியும் என்பது உறுதி. தமிழகத்தின் பருவநிலையும் மண்ணும் வேம்பு வளர்வதற்கு உகந்ததாக அமைந்துள்ளதால், வேப்ப மரங்களைப் பராமரிப்பதற்கு பெரிதாக நாம் மெனக்கெடத் தேவையில்லை.
Source : http://isha.sadhguru.org/blog/ta/veppamaram-nattu-vaithal-vaithiyar-thevaiyillai/