தட்கல்’ ரெயில் டிக்கெட்டுகளையும், ‘பிரிமியம்’ ரெயில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்தால், குறிப்பிட்ட சதவீத கட்டணத்தை திருப்பித்தர ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏ.சி. அல்லாத பெட்டிகளுக்கான ‘தட்கல்’ டிக்கெட் முன்பதிவு நேரத்தையும் மாற்ற உள்ளது.
கட்டணம் வாபஸ்
‘தட்கல்’ முறையில் எடுக்கப்பட்ட, உறுதி செய்யப்பட்ட ரெயில் டிக்கெட்டுகளை ரத்து செய்தால், கட்டணத்தில் ஒரு பகுதி கூட திருப்பித்தரப்படுவது இல்லை. இந்நிலையில், உறுதி செய்யப்பட்ட ‘தட்கல்’ டிக்கெட்டுகளை ரத்து செய்தால், குறிப்பிட்ட சதவீத கட்டணத்தை திருப்பித்தர ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இதற்காக ஒரு காலவரையறை நிர்ணயிக்கப்படும் என்றும், ரத்து செய்யப்படும் நேரத்துக்கு ஏற்ப, குறிப்பிட்ட சதவீத கட்டணம் திருப்பித்தரப்படும் என்றும் ரெயில்வே (போக்குவரத்து) உறுப்பினர் அஜய் சுக்லா நேற்று நிருபர்களிடம் கூறினார்.
இது, விரைவில் அமலுக்கு வரும் என தெரிகிறது.
நேரம் மாற்றம்
அதுபோல், ‘தட்கல்’ டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு நேரத்தையும் மாற்ற ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஏ.சி. பெட்டிகளுக்கு, தற்போது உள்ளதுபோல், காலை 10 மணிக்கு தொடங்கி காலை 11 மணிக்கு முன்பதிவு முடிவடையும்.
ஏ.சி. அல்லாத பெட்டிகளுக்கான ‘தட்கல்’ டிக்கெட்டுகள் முன்பதிவு நேரத்தில்தான் மாற்றம் செய்யப்படுகிறது. இந்த பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கு தொடங்கி, பகல் 12 மணிக்கு முன்பதிவு முடிவடையும். இந்த புதிய முறை, ஓரிரு நாளில் அமலுக்கு வரும் என்றும் அஜய் சுக்லா கூறினார்.
பிரிமியம் ரெயில்களுக்கும் கட்டணம் வாபஸ்
‘பிரிமியம்’ ரெயில்களின் பெயரை ‘சுவிதா’ ரெயில்கள் என்று மாற்றம் செய்யவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ரெயில்களிலும், டிக்கெட்டுகளை ரத்து செய்தால், கட்டணத்தை வாபஸ் பெறும் முறை அமல்படுத்தப்படுகிறது.
ரத்து செய்யப்படும் நேரத்துக்கு ஏற்ப, அதிகபட்சமாக 50 சதவீத கட்டணம் திருப்பித்தரப்படும்.
தட்கல் சிறப்பு ரெயில்கள்
இதுமட்டுமின்றி, கோடை கால, பண்டிகை கால சிறப்பு ரெயில்களைப் போல நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் ‘தட்கல் சிறப்பு’ ரெயில்களை இயக்கவும் ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இத்தகைய ரெயில்களில் வழக்கமான ரெயில்களை விட கட்டணம் அதிகமாகவே இருக்கும்.
நெரிசல் மிகுந்த வழித்தடங்களில் ஏற்கனவே ‘பிரிமியம்’ ரெயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, இத்தகைய ‘தட்கல் சிறப்பு’ ரெயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
முன்பதிவு
இந்த ரெயில்களுக்கு பயண தேதிக்கு 60 நாட்கள் முன்பிருந்து முன்பதிவு தொடங்கும். பயண தேதிக்கு 10 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு நிறுத்தப்படும். இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமின்றி, ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டர்களிலும் பெறலாம்.
வழக்கமான ‘தட்கல்’ டிக்கெட்டுகளுக்கு பயணத்துக்கு முந்தைய நாள்தான் முன்பதிவு செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
Source : Dinathanthi