திருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய சொகுசு கார் டீக்கடைக்குள் புகுந்தது. இந்த விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:–
டீக்கடைக்குள் புகுந்த கார்
திருவட்டார் அருகே உள்ள மாத்தூர் தாணவிளையை சேர்ந்தவர் ஜஸ்டின் ராஜ் (வயது 26). இவர் சொகுசு காரில் அழகியமண்டபத்தில் இருந்து மாத்தூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார். காரில் ஜஸ்டின் ராஜ் உள்பட 5 பேர் இருந்துள்ளனர். இவர்கள் கும்மாளம் இட்டபடி காரில் சென்றதாக தெரிகிறது.
இந்நிலையில் கார் வேர்கிளம்பி அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதற்கிடையே சொகுசு கார், அந்த பகுதியில் ரோட்டோரம் இருந்த தங்கையா (71) என்பவருடைய டீக்கடைக்குள் புகுந்தது.
7 பேர் படுகாயம்
இந்த விபத்தில் தங்கையா, டீக்கடைக்குள் இருந்த வீயன்னூரை சேர்ந்த பால்ராஜ் (48) மற்றும் சசிகுமார் (45), கடைக்கு வெளியில் நின்ற பூவங்கோடை சேர்ந்த மனோன்மணி (60), வேர்கிளம்பியை சேர்ந்த ரகு (40), அருவிக்கரையை சேர்ந்த ஜோன்ஸ் (40), காரை ஓட்டிவந்த ஜஸ்டின் ராஜ் ஆகிய 7 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டனர்.
இதில் மனோன்மணி, ரகு, ஜோன்ஸ், தங்கையா, ஜஸ்டின் ராஜ் ஆகிய 5 பேரும் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பால்ராஜ், சசிகுமார் ஆகிய 2 பேரும் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து ஜஸ்டின் ராஜ் மீது திருவட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.