Accident near Thuckalay : 3 year old girl & driver’s death

Ambulance-near-Nagercoil-accident

நாகர்கோவில்,

குமரி மாவட்டம் தக்கலை அரசு மருத்துவமனை அருகே பனவிளையைச் சேர்ந்தவர் அபுஜாசிம் (வயது 33). இவர் சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ஐஷா பேகம் (29). இவர்களுக்கு அர்ஷியா ஜஸ்னா (3), அல்பிஷா எஸ்னா (1½) என்ற பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்தநிலையில் அர்ஷியா ஜஸ்னா உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாள். இதையடுத்து அவளுக்கு நாகர்கோவிலை அடுத்த வெள்ளமடம் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். அப்போது, ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள் குழந்தைக்கு ஸ்கேன் எடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இதையடுத்து ஆம்புலன்சில் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஸ்கேன் மையத்துக்கு ஸ்கேன் எடுக்கச் சென்றனர்.

சிறுமி–டிரைவர் சாவு

ஆம்புலன்ஸில் சிறுமி அர்ஷியா ஜஸ்னாவுடன், அவளுடைய தந்தை அபுஜாசிம், ஆஸ்பத்திரி நர்சான ஆரல்வாய்மொழி பொய்கை நகரைச் சேர்ந்த ஏஞ்சல் கிறிஸ்டி (22) ஆகியோரும் சென்றனர். ஆம்புலன்சை சுசீந்திரம் அருகில் உள்ள நல்லூர் இளையநயினார் குளத்தைச் சேர்ந்த பெனிக்ஸ்பாபு (23) என்பவர் ஓட்டினார். சிறுமிக்கு ஸ்கேன் எடுத்தபிறகு, ஸ்கேன் அறிக்கையை காண்பிப்பதற்காக அதே ஆம்புலன்சில் அவர்கள் வெள்ளமடத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸ் தேரேகால்புதூர் அருகே ஒரு பஸ் நிறுத்தம் பக்கமாக சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த டிப்பர் லாரி திடீரென எதிர்பாராதவிதமாக மோதியது. மோதிய வேகத்தில் ஆம்புலன்ஸ் அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஆம்புலன்சை ஓட்டிய டிரைவர் பெனிக்ஸ்பாபு, சிறுமி அர்ஷியா ஜஸ்னா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக துடிதுடித்து இறந்தனர். மேலும் சிறுமியின் தந்தை அபுஜாசிம், நர்ஸ் ஏஞ்சல் கிறிஸ்டி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

சோகம்

விபத்து நடந்ததும் டிப்பர் லாரி டிரைவர் தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும், நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கண்மணி, சப்–இன்ஸ்பெக்டர் ஞானதாஸ், சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர்கள் சசிதரன், மோகன்குமார், மணிவண்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 2 பேரையும் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

விபத்தில் இறந்த சிறுமி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீசார், டிப்பர் லாரியின் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகில் உள்ள பிள்ளையார்குளத்தைச் சேர்ந்த ராஜ்குமார் (23) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்போது விபத்து நடந்த பகுதி, அடிக்கடி விபத்து நடைபெறக்கூடிய பகுதி என போலீசாரால் கண்டறியப்பட்டு ஏற்கனவே எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் இரவு நேரங்களில் ஒளிரக்கூடிய பிரதிபலிப்பு விளக்குகள் அமைக்கப்பட்ட பகுதியாகும். இருப்பினும் அதே இடத்தில் நேற்று நடந்த விபத்தில் 2 பேர் பலியான சோகம் நடந்துள்ளது.

 

Source Dailythanthi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *