அருமனை அருகே பழுதடைந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருவதால் அடிக்கடி விபத்துகள் நடைபெறும் சம்பவம் நடந்து வருகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ் ஒன்று உத்திரம்கோடு என்ற இடத்தில் திடீரென பழுதானது. அந்த சமயத்தில் பஸ் மேடான பகுதியில் சென்று கொண்டிருந்தது. இதனால் அந்த பஸ் பின்னோக்கி வந்தது. பிரேக்கும் பிடிக்காததால் பஸ், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக டிரைவர் மீது அருமனை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் விபத்துக்குள்ளான பஸ் அருமனை போலீஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த பஸ்சை நேற்று ஊழியர்கள் பணிமனைக்கு எடுத்து சென்றனர். அருமனை நெடுங்குளம் சந்திப்பில் சென்ற போது பிரேக் பிடிக்காததால் பஸ் பள்ளத்தில் இறங்கி விபத்துக்குள்ளானது. இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பழுதடைந்த பஸ்களால் ஏற்படும் விபத்து பிரச்சினைக்கு தீர்வு காண போக்குவரத்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.