Nagercoil :நாகர்கோவில் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ள கடைகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நகர தெருக்களிலும் பிளாட்பாரங்களில் ஆக்கிரமிப்பு உள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது.
அதைத்தொடர்ந்து கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் உத்தரவின்பேரில், நகரசபை கமிஷனர் ராமமூர்த்தி ஆலோசனைப்படி நகரமைப்பு அதிகாரி கண்ணன் தலைமையில் ஆய்வாளர்கள் கெபின்ஜாய், துர்காதேவி, சந்தோஷ்குமார், மகேஸ்வரி மற்றும் ஊழியர்கள் நேற்று, நகரில் குறிப்பிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
போலீஸ் பாதுகாப்புடன்
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஆனைப்பாலம் கரியமாணிக்கபுரம் பகுதியில் நடந்தபோது ரோட்டோரம் உள்ள கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. மேலும் வடிவீஸ்வரம் பெருமாள்கோவில் தெரு, ஆசாரிமார் வடக்குத்தெரு, வடசேரி குன்னுவிளை, காமாட்சி அம்மன் கோவில் தெரு ஆகிய இடங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஊழியர்களின் துணையோடு ராட்சத எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. காமாட்சி அம்மன் கோவில் தெருவில் ஒரு பெட்டிக்கடை முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்டது. ஏதும் அசம்பாவித சம்பவம் நிகழ்ந்து விடாமல் தடுப்பதற்காக அங்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
நகரில் இதுபோல ஆக்கிரமிப்புகள் படிப்படியாக அகற்றப்படும் என்றும், ஆக்கிரமிப்பு செய்தவர்களே ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source : Dinathanthi