ஆராட்டு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 23–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் சிறப்பு அபிஷேகம், பூஜை, சொற்பொழிவு, வாகன பவனி, சப்பர ஊர்வலம், அன்னதானம், கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது. 10–ந் திருவிழாவான நேற்று காலையில் முக்கடல் சங்கமத்தில் உற்சவ அம்மனுக்கு (பகவதி அம்மனுக்கு) கடலில் ஆராட்டு நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி காலையில் பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் வீதி உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து கோவிலின் கிழக்கு வாசலில் உள்ள மண்டபத்தில் வைத்து அம்மனுக்கு பூஜை, வழிபாடு, மஞ்சள் அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு கடலில் ஆராட்டு நடந்தது.
கிழக்கு வாசல் திறப்பு
இதில் கோவில் மேல்சாந்திகள் மணிகண்டன் போற்றி, விட்டல் போற்றி, கீழ்சாந்திகள் சீனிவாசன் போற்றி, ராமகிருஷ்ணன் போற்றி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து ஆண்டுக்கு 5 முக்கிய நாட்களில் மட்டுமே திறக்கப்படும் கோவிலின் கிழக்கு வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக அம்மன் கொண்டு வரப்பட்டு பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மேலும், பக்தர்களும் அந்த வழியாக கோவிலுக்குள் வந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், சென்னையை சேர்ந்த தட்சயாக ஆராய்ச்சியாளர் எம்.கே. பிரதீப் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Source : Daily thanthi