நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் விடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்கு இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்குப் பருவ மழை தீவிரமடைந்திருப்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக விடாமல் கன மழை கொட்டி வருவதால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது
நாகர்கோவில், குளச்சல், கொட்டாரம் உள்பட மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் விடாமல் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பலத்த மழை காரணமாக பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தொடர் மழையின் காரணமாக வள்ளியாறு, பரளியாறு, குழித்துறையாறு, சுசீந்திரம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மலையோர பகுதிகளில் கொட்டி தீர்த்து வரும் கனமழையினால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு கணிசமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணை பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 1½ அடி உயர்ந்துள்ளது.
தொடர் கன மழை காரணமாக மாவட்டம் முழுவதும் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்கள் தவிப்பு
குமரியில் பெய்து வரும் தொடர்மழையினால் மார்த்தாண்டம், ஆரல்வாய்மொழி, திட்டுவிளை, தோவளை, இராமனாதிச்சன்புதூர் உள்ளிட்ட இடங்களில் செங்கல்சூளை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்இந்த தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கின்றனர்.
வேலையிழப்பு
குமரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் தோட்டங்களில் சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்கள் ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்து வருகின்றனர். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தற்போது பால்வெட்டும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
திற்பரப்பு அருவியில் வெள்ளம்
குலசேகரம், திற்பரப்பு, பேச்சிப்பாறை ஆகிய பகுதிகளில் பெய்த மழையினால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருவியில் குளிக்கசுற்றுலாப் பயணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. எனவே வெளியூர்களிலிருந்து அருவிக்கு வந்திருந்த சுற்றுலாப்பயணிகள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
படகு போக்கு வரத்து நிறுத்தம்
கன்னியாகுமரி கடலில் சீற்றம் அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் கன்னியாகுமரிக்கு வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.