நெத்தலி மீன்
குளச்சல் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிக்கப்பட்டு வருகிறது. விசைப்படகு மூலம் மீன் பிடிப்பது வருகிற 15–ந்தேதியுடன் முடைவடைய இருப்பதாகவும், அதன்பிறகு 45 நாட்கள் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடைக்காலமாகும்.
கடந்த சில மாதங்களாக நெத்தலி மீன் சீசன் காலமாகும். கடலில் கட்டுமரம் மற்றும் பைபர் வள்ளத்தில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் நெத்தலி மீன்களை ஏராளமாக பிடித்து வருகிறார்கள். கடந்த 2 நாட்களாக குளச்சல் சுற்று வட்டார பகுதிகளான கொட்டில்பாடு, சைமன்காலனி, கோடிமுனை, குறும்பனை, வாணியக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நெத்தலி மீன்கள் அதிகமாக கிடைத்தன. அவற்றை உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் குறைந்த விலைக்கே ஏலம் எடுத்து சென்றனர். மீனவர்களின் வலையில் நெத்தலி மீன்கள் அதிகமாக கிடைத்த போதிலும் அவை எதிர்பார்த்த விலைக்கு போகவில்லை. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
கருவாடாகிறது
இதைத்தொடர்ந்து மீனவர்களிடம் தேங்கிய நெத்தலி மீன்களை, குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவ பெண்கள் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தனர். பின்னர் அவற்றை கருவாடாக்க குளச்சல் கடற்கரை மணற்பரப்பில் உலர வைத்து உள்ளனர். கடலில் நெத்தலி மீன்கள் அதிக அளவில் கிடைத்தும் விலை போகாததால் தற்போது கருவாடாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
உலர வைத்துள்ள மீன்கள் கருவாடானதும் அவற்றை பெண்கள் சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்வார்கள். அந்த வியாபாரிகள் அவற்றை வாங்கி தூத்துக்குடி, திருச்சி, கோவில்பட்டி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.
Source : Dinathanthi