நாகர்கோவில் நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்பணி தொடங்கியதில் இருந்து நகரின் சாலை ஒவ்வொன்றும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சி அளிக்கின்றன. தார்சாலைகளாக இருந்த அனைத்தும் குண்டும், குழியுமான நிலையில் படுகோரமாகவும், கிராமப்புறங்களில் உள்ள மண் சாலைகளைப் போன்றும் காட்சி அளிக்கின்றன. மழைகாலங்களில் சேறும், சகதியுமாகவும், வெயில் காலத்தில் சாலையில் செல்வோர் முகத்தில் புழுதிவாரி தூற்றுவதாகவும் சாலைகள் அமைந்து விட்டன.
இதனால் சாலைகள் அனைத்தையும் உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் இருந்து கோரிக்கைகள் எழுந்தவண்ணமாக உள்ளன. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகர்கோவில் டதி பள்ளியில் இருந்து டபிள்யூ.சி.சி. சந்திப்பு செல்லும் சாலையும், கற்கோவில் பகுதியில் இருந்து டதி பள்ளிக்கு வரும் சாலையும் சீரமைக்கப்பட்டன. அதையடுத்து பாதாள சாக்கடை பணி முதன் முதலாக தொடங்கப்பட்ட பகுதி அமைந்துள்ள ராமன்புதூர் சந்திப்பு முதல் தட்டான்விளை வழியாக ஆயுதப்படை முகாம் சாலை வரையில் ரூ.31 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. இந்த பணியை நகரசபை தலைவர் மீனாதேவ்(Meena Dev) தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பா.ஜனதா(BJP) மாவட்ட துணைத்தலைவர் தேவ், நகர தலைவர் ராகவன், பொதுச்செயலாளர் அஜித்குமார், கவுன்சிலர் ரமேஷ், தி.மு.க. மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் சதாசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Source : dailythanthi